Sunday, June 27, 2010

உங்களைப் பாராட்டினால் அதற்கும் திட்டுவீர்களா? உங்களிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது சாரு…

நிரஞ்சனா,

பெங்களூரு.

நீங்கள் இந்த எழுத்துலகுக்குப் புதியவர் என்பதால் இந்தச் சூழல் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதுப்பேட்டை சினிமாவை எதற்கு உதாரணம் காட்டினேன்? அந்த அளவுக்கு பயங்கரமானது எழுத்து உலகம். புதுவை இளவேனில் என்னைப் போன்றவர். அவர் மனதில் உள்ளதைத்தான் சொல்லியிருப்பார். ஆனால் ரவிக்குமார்? கருணாநிதியின் கவிதைகளை பாரதியின் கவிதைகளோடு ஒப்பிட்டவர் ஆயிற்றே? மனுஷ்ய புத்திரன் மட்டும் சும்மாவா? கமல்ஹாசனைப் பாராட்டுகிறார். விஜய் மகேந்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் ஒரே மாதிரி ப்ளர்ப் எழுதுகிறார். அதனால் யார் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றே புரிய மாட்டேன் என்கிறது.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவுட்லுக் பத்திரிகையில் செம்மொழி மாநாடு பற்றிய மனுஷ்ய புத்திரனின் பேட்டியைப் பாருங்கள். அந்தக் காலத்தில் ரொம்பப் பூடகமாக படிமக் கவிதை எழுதுவார்கள். அந்த ஸ்டைலில் பேட்டி கொடுத்திருக்கிறார். கருணாநிதியைத் திட்டுகிறாரா, பாராட்டுகிறாரா? ஒரு மண்ணும் புரியவில்லை. அப்படி ஒரு பேட்டி.

அதிலும் நான் கவிதை எழுத ஆரம்பித்ததிலிருந்து மனுஷ்ய புத்திரன் என்னிடம் அவ்வளவாகப் பேசுவதில்லை. சில தினங்களுக்கு முன்பு நீண்ட கவிதை ஒன்றை அனுப்பி வைத்தேன். பிரசுரிக்கக் கூட வேண்டாம்; எப்படி வந்திருக்கிறது என்று சொன்னால் போதும் என்றேன். அதோடு காணாமல் போனவர் தான்; எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அதனால் ரவிக்குமார், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் பாராட்டு எனக்குள் ஒரு கிலியை ஏற்படுத்துகிறது. தூக்கம் கூட வரவில்லை. அதனால் இன்று மூன்று மணிக்கே எழுந்து விட்டேன்.

25.6.2010.

Thursday, June 24, 2010

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்று ஒரு குறள் தொடங்குகிறது அல்லவா? அந்தக் குறள் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை. அப்படிப் பின்பற்றும் ஒருவரை அண்மையில் கண்டேன். அவர் பெயர் ரவிக்குமார் எம்.எல்.ஏ. எம்.எல்.ஏ. என்பது பெயரின் இனிஷியல் அல்ல; அது அவர் வகிக்கும் பதவி. அவரைப் பற்றி அவ்வப்போது என் பத்தியில் விமர்சித்து எழுதுவது என் வழக்கம்.

அப்படிச் செய்தால் பொதுவாக மற்றவர்கள் பகைமைதானே பாராட்டுவார்கள்? ஆனால் ரவிக்குமார் திருவள்ளுவரின் வாக்குப்படி வாழ்பவர் ஆயிற்றே? சமீபத்தில் என்னிடம் பேசிய அவர் புதுவை இளவேனில் சொன்னதாக ஒரு தகவல் சொன்னார். என்ன அது? என் கவிதைகள் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை விட நன்றாக இருக்கிறது என்று புதுவை இளவேனில் சொன்னாராம். அதைக் கேட்டதும் எனக்கு ஒருக்கணம் மூச்சே நின்று விடும் போல் இருந்தது. ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இளவேனிலிடம் ரவிக்குமார் “இதை வெளியே எங்கேயும் சொல்லி விடாதீர்கள்; அப்புறம் உயிரோடு நடமாட முடியாது…” என்று சொல்லியிருக்கிறார்:

அதிர்ச்சியில் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த என்னிடம் ரவிக்குமார் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். ”நானும் அப்படித்தான் நினைக்கிறேன்; ஆனால் வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்தாயிற்றே?”

நான் ஆமாம் ஆமாம் என்று சொல்லி விட்டுப் பேச்சை மாற்றினேன்.

ரவிக்குமார் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வதென்று எனக்குப் புரியவில்லை. அமைதிப்படை, புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்கள் மனதில் நிழலாடின. என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று புரியவில்லையே? தனுஷின் அப்பாவை உயிரோடு புதைக்கிறார்கள் தனுஷின் அடியாட்கள். அந்த சவக்குழியைத் தோண்டியதே தனுஷின் அப்பாதான். டேய் வுட்ருங்கடா, வுட்ருங்கடா என்று அந்த அடியாட்களிடம் கெஞ்சுகிறார் அப்பா. அப்போது அந்த அடியாட்களில் ஒருவன் சொல்கிறான். வுட்ருவோம் பெருசு… ஆனா உம் பையன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இந்தக் குழிய நோண்டில்ல பார்ப்பான்? என்ன செய்யுறது?” என்று கேட்டு விட்டு தனுஷின் அப்பா மீது மண்ணை அள்ளிப் போட்டுப் புதைப்பார்கள்.

மன்னியுங்கள். இந்தக் காட்சி ஏன் அப்போது எனக்கு ஞாபகம் வந்தது என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. ஏதாவது மனக்குறளியாகத்தான் இருக்க வேண்டும். நித்தியானந்தனிடம் பட்ட அடியால் என் மூளையே பிசகிப் போயிருக்கிறதோ என்னவோ?

சரி விடுங்கள். இந்தச் சம்பவத்தை – அதாவது, ரவிக்குமார் எம்.எல்.ஏ. என் கவிதைகள் பற்றிச் சொன்னதை ஒருநாள் மனுஷ்ய புத்திரனிடமே சொன்னேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சாரு…”