Sunday, June 27, 2010

உங்களைப் பாராட்டினால் அதற்கும் திட்டுவீர்களா? உங்களிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது சாரு…

நிரஞ்சனா,

பெங்களூரு.

நீங்கள் இந்த எழுத்துலகுக்குப் புதியவர் என்பதால் இந்தச் சூழல் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதுப்பேட்டை சினிமாவை எதற்கு உதாரணம் காட்டினேன்? அந்த அளவுக்கு பயங்கரமானது எழுத்து உலகம். புதுவை இளவேனில் என்னைப் போன்றவர். அவர் மனதில் உள்ளதைத்தான் சொல்லியிருப்பார். ஆனால் ரவிக்குமார்? கருணாநிதியின் கவிதைகளை பாரதியின் கவிதைகளோடு ஒப்பிட்டவர் ஆயிற்றே? மனுஷ்ய புத்திரன் மட்டும் சும்மாவா? கமல்ஹாசனைப் பாராட்டுகிறார். விஜய் மகேந்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் ஒரே மாதிரி ப்ளர்ப் எழுதுகிறார். அதனால் யார் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றே புரிய மாட்டேன் என்கிறது.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவுட்லுக் பத்திரிகையில் செம்மொழி மாநாடு பற்றிய மனுஷ்ய புத்திரனின் பேட்டியைப் பாருங்கள். அந்தக் காலத்தில் ரொம்பப் பூடகமாக படிமக் கவிதை எழுதுவார்கள். அந்த ஸ்டைலில் பேட்டி கொடுத்திருக்கிறார். கருணாநிதியைத் திட்டுகிறாரா, பாராட்டுகிறாரா? ஒரு மண்ணும் புரியவில்லை. அப்படி ஒரு பேட்டி.

அதிலும் நான் கவிதை எழுத ஆரம்பித்ததிலிருந்து மனுஷ்ய புத்திரன் என்னிடம் அவ்வளவாகப் பேசுவதில்லை. சில தினங்களுக்கு முன்பு நீண்ட கவிதை ஒன்றை அனுப்பி வைத்தேன். பிரசுரிக்கக் கூட வேண்டாம்; எப்படி வந்திருக்கிறது என்று சொன்னால் போதும் என்றேன். அதோடு காணாமல் போனவர் தான்; எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அதனால் ரவிக்குமார், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் பாராட்டு எனக்குள் ஒரு கிலியை ஏற்படுத்துகிறது. தூக்கம் கூட வரவில்லை. அதனால் இன்று மூன்று மணிக்கே எழுந்து விட்டேன்.

25.6.2010.

No comments: