Wednesday, October 1, 2008

கி.ரா.வின் 'இடைசெவல்' வெளியீடு!


தமிழ் இலக்கிய உலகத்தில் கரிசல் காட்டு எழுத்தாளராக அறியப்படும் கி.ரா.. என்கிற கி.ராஜநாராயணனைப் பற்றி ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


பெரும்பாலான எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் தன் கேமராவிற்குள் பிடித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்க புகைப்பட கலைஞராக திகழும் புதுவை இளவேனில் 'இடைசெவல்' என்று அழைக்கப்படும் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.


சம்பளம் எதுவும் வாங்காமல் இந்தப்படத்திற்கென எடிட்டிங் செய்து கொடுத்திருக்கிறார் எடிட்டர் பி.லெனின்.'


இடைசெவல்' - பெயரைப் போலவே படம் ஆரம்பிப்பதும் 'இடைசெவல்' கிராமத்தில் தான். பழைய திருநெல்வேலி மாவட்டம் அருகே... என்று படம் துவங்குகையில்... மண்வாசனையை நுகர்ந்து கொண்டே... ஒரு அசலான கிராமத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு உணர்வு நமக்குள் ஏற்படுகிறது.


தன்னுடைய கதைகள் போலவே கி.ரா.வும் வெகு இயல்பு. நான் என்ன பேச வேண்டும் என்று கலந்து கொண்டவர்களிடம் கி.ரா. கேட்கையில் ஒரு வெள்ள நதியான, எளிமையான மனிதனை நம்முன் காட்டுகிறார்.

கி.ரா.ஜெயகாந்தன், கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜெகத் கஸ்பர், ரவிக்குமார் எம்.எல்.ஏ, நடிகர் சிவகுமார், இயக்குனர் தங்கர்பச்சன், விமர்சகர் இந்திரன்... என கலந்து கொண்டவர்களின் பட்டியல் கலப்படமாய் இருந்தது சுவை.


வயதானவர்கள் பற்றி கி.ரா. சொன்னதாக நடிகர் சிவகுமார் சொன்ன கதை... அவ்வளவு அழகு. அவ்வளவு அர்த்தம். தங்கர்பச்சன் உரிமையுடன் அப்பா என்று அழைத்து நெகிழ்ந்தார்.


படத்தை தயாரித்த வசந்தி பிரகலாதன் பேசுகையில், ''தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை, நாம் உரிய நேரத்தில் கொடுப்பதில்லை'' என்ற உண்மையை பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டினார.


இலக்கியம், சினிமா, அரசியல் மூன்றும் ஒரு தண்டவாளத்தில் பயணிக்க ஆரம்பித்தால் அந்த தேசம்... உலகை ஆளும் என்பது இந்த நிகழ்வின் மூலமாக நாம் பெறும் செய்தி. தொடர்ந்து சினிமாவும், இலக்கியமும், அரசியலும் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நியாயமான உதவிகளை பாரபட்சமில்லாமல் செய்யட்டுமாக...


படைப்பாளிகளையும், படைப்பாளிகளை கௌரவிப்பவர்களையும் நெஞ்சார வாழ்த்துவோம்.

Courtesy: http://www.thangamonline.com/


No comments: